×

ஆக்கிரமிப்பால் நாளுக்கு நாள் சுருங்கி வரும் கழனிவாசல் நெடுஞ்சாலை

காரைக்குடி, ஏப்.23: காரைக்குடி கழனிவாசல் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் சாலையின் அளவு சுருங்கி வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. காரைக்குடி கழனிவாசல் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர இச்சாலை வழியாகத்தான் மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் செல்கின்றன. அதேபோல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்கள் அனைத்தும் வந்து செல்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வெளியூர் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சாலை வழியாகத்தான் வரவேண்டும். இவ்வளவு போக்குவரத்து நெருக்கடி மிக்க சாலையில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. கழனிவாசல் மூன்று சாலை சந்திக்கும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. சாலையை ஆக்கிரமித்து பல்வேறு வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் சாலையின் அளவு சுருங்கி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. பாதசாரிகள் நடந்து செல்லக்கூட இடம் இல்லாததால் விபத்து நடப்பது வாடிக்கையாகி வருகிறது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் இருந்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இதேபோல் தமிழ்த்தாய் கோவில் சாலை சந்திக்கும் இடத்தின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. பகல் நேரத்தில் பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும். ஆனால் இரவு நேரத்தில் சாலை ஓர பள்ளங்கள் இருப்பது தெரியாது. இதனால் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு விலகும் போது தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சாலை ஓரங்களில் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும். ஆனால் சாலை அமைத்து பலவருடங்கள் ஆகியும் இதுவரை சாலை ஓர கம்பி அமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

Tags : Kannanavelai ,highway ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...