×

சீசன் துவங்கி விட்ட நிலையில் கார்பைட் கற்கள் மாம்பழங்கள் விற்பனை

ராமநாதபுரம், ஏப்.23: தமிழகத்தில் கோடை கால மாம்பழ சீசன் தொடங்கி விட்ட நிலையில், மார்க்கெட்டிற்கு மாம்பழங்கள் வர தொடங்கியுள்ளது. மாநிலத்தில் திருச்சி, நத்தம், மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், கொடைக்கானல் பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் மாம்பழங்கள் வருகிறது. பாலாமணி, செந்தூரம், மல்கோவா, கிளிமூக்கு என பத்துக்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் தினமும் 10 டன் முதல் 15 டன் வரை பல்வேறு ரக மாம்பழங்கள் ஏராளமாக லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெளி மாநிலங்களிலிருந்து வரும் மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்க பல நாட்கள் ஆகும் என்பதால், காய் பருவத்திலே பறித்து வந்து விற்பனை செய்கின்றனர். இதை வாங்கும் வியாபாரிகள் ரகசியமான இடத்தில் பதுக்கி வைத்து ஒரே நாளில் ரசாயன முறையில் பழுக்க வைக்க கார்பைட் கற்களை பயன்படுத்துகின்றனர். இக்கற்களை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படும். குழந்தைகள் தொடர் வாந்தி, பேதி ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரத்தில் மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் என மாம்பழம் விற்பனை செய்கின்றனர். மொத்த விற்பனையாளர்கள் மூலமாக மாவட்டத்தில் நகர்புறங்கள், பல குக்கிராமங்கள் வரை சில்லரை விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையாளர்கள் தினமும் மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கி தெருக்களில், சாலையோரத்தில் விற்பனை செய்கின்றனர்.தற்போது சீசன் துவக்கத்தில் உள்ளதால் தென்மாவட்டங்களிலிருந்து அதிகளவில் மாம்பழங்கள் வரத்து இருக்கும் என்றும், சீசன் முடியும் காலத்தில் வெளி மாநிலங்களிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாம்பழங்கள் வரும். வெளி மாநிலங்களிலிருந்து வர குறைந்தது 5 நாட்கள் ஆகின்ற நிலையில் குறைந்தளவே மாம்பழங்கள் வருகின்றது. உயர்தரமான மாம்பழங்கள் கிலோ ரூ.200 வரை விற்பனையாகிறது.காய் பருவத்தில் வரும் மாம்பழங்களை கார்பைடு கற்கள் மூலமாகவும், திரவங்களை தெளித்தும் பழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். எனவே கார்பைடு கற்களைக் கொண்டு பழுக்க வைப்பவர்கள், அதனை விற்பனை செய்பவர்களை கண்காணித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மாம்பழம் வாங்கும் போது ரசாயனக் கற்கள் மூலமாக பழுக்க வைக்கப்பட்டு உள்ளதா என கண்டறிந்து வாங்க வேண்டும். நாட்டு மாம்பழங்களையே சாப்பிட வேண்டும் ருசியாக உள்ளது என செய்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்ண கூடாது என்கின்றனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் நகர் மற்றும் கிராமப்புற பழ விற்பனை கடைகளில் ஆய்வு நடத்த வேண்டும். செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோடை விடுமுறையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பழமாக மாம்பழம் உள்ளது. குழந்தைகளை கடை தெருவில் அழைத்து செல்லும் போது மாம்பழத்தை பார்த்தாலே வாங்கிதா என அடம்பிடித்து அழும் நிலையில் உள்ளது. பெற்றோர்களும் பழங்களின் தன்மை அறியாமல் வாங்கி கொடுத்து விடுகின்றனர்

Tags : season ,
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...