×

கீழக்கரை கடலில் சிறுவர்கள் ஆபத்தான குளியல்

கீழக்கரை, ஏப்.23: கீழக்கரை கடலில் ஆழமான பகுதியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து விளையாடுகிறார்கள். சம்மந்தப்பட்ட துறையினர் கண்காணித்து சிறுவர்களுக்கு அறிவுரை கூறி தடுத்து நிறுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கீழக்கரை நகரம் நீண்ட கடற்கரையை கொண்டது. இங்குள்ள கடல் பகுதியில் மீன்பிடி விசைபடகுகளை கட்டுவதற்காக ஜெட்டி பாலம் கட்டப்பட்டுள்ளது. அதிக ஆழமான இந்த கடல் பகுதியில் சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர்.பள்ளி விடுமுறை மற்றும் அதிக வெயிலின் தாக்கத்தாலும், குளம் மற்றும் ஊரணிகள் வற்றி வரண்டு இருப்பதாலும் இப்பகுதி சிறுவர்கள் சூட்டை தணிப்பதற்காக விபரீதத்தை உணராமல் இங்கு வந்து பாலத்திலிருந்து குதித்து விளையாடுகின்றனர். மேலும் பாறைகள் அதிகம் நிறைந்த இந்த கடல் பகுதியில் பல விபத்துக்கள் நடைபெற்று பலர் உயிரிழந்துள்ளனர். எனவே நீச்சல் தெரிந்தவர்கள் உதவியுடன் இவ்விளையாட்டில் ஈடுபட்டால் அது பாதுகாப்பாக இருக்கும். ஆகவே சம்மந்தப்பட்ட துறையினர் இப்பகுதியில் கண்காணித்து சிறுவர்களுக்கு அறிவுரை கூறி இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடம் புது கிழக்குத் தெரு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலம் (பழைய குப்பை கிடங்கு) எந்த பயனும் இல்லாமல் கிடக்கின்றது. அந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் பூங்கா போல் அமைத்து அனைவரும் குளித்து மகிழ நீச்சல் குளம் கட்டி கொடுத்து கட்டணம் வசூலித்தால் எந்த ஆபத்தும் இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை குளிப்பார்கள். மேலும் இது நகராட்சிக்கு ஒரு வருமானத்தையும் உண்டாக்கும் என்றனர்.

Tags : Children ,sea ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...