கோடை மழையால் சேறும், சகதியுமாக மாறிய காய்கறி சந்தை

திருப்பூர், ஏப்.22:  கோடை மழை காரணமாக தென்னம்பாளையம் காய்கறி சந்தை சேறும்,சகதியுமாக மாறியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். திருப்பூர்-பல்லடம் மெயின் ரோட்டில் தென்னம்பாளையம் பகுதியில் தினசரி மொத்த காய்கறி மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. திருப்பூர் சுற்றியுள்ள பகுதிகளான செட்டிபாளையம், வாவிபாளையம், நெருப்பெரிச்சல், மங்கலம், அருள்புரம், மண்ணரை, புதூர், அவிநாசி  உட்பட பல்வேறு கிராமங்களிலிருந்து பல்வேறு வகையான காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.  

ஊட்டி காய்கறிகள் மட்டும் தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் சந்தைக்கு வருகிறது.  வடமாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயம் தினசரி 15 லாரிகள் முதல் 20 லாரிகளில்  வருகிறது. துாத்துக்குடியிலிருந்து கடல் மீன்கள் தினமும்  குறைந்தபட்சம் 10 லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. மொத்த காய்கறி சந்தை வளாகத்தில் மொத்த மீன் சந்தையும் உள்ளது.  திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த சிறு வியாபாரிகள் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகள், மீன்கள் வாங்கி தாங்கள் வைத்துள்ள கடைகளில் சில்லரை விலையில் விற்பனைசெய்கின்றனர். தினமும் பல கோடி ரூபாய் பழக்கத்தில் உள்ள மொத்த மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு தேவையான  அடிப்படை பிரச்னைகளை நிவர்த்தி செய்ய மாநகராட்சி  நிர்வாகம் செய்ய தவறிவருகிறது. மாநகராட்சிக்கு ஆண்டு குத்தகையாக ரூ.50 லட்சத்துக்க மேல் வருவாய் கிடைத்தும் முறையான அடிப்படை வசதிகள் இல்லை.

கடந்த இரு நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் காய்கறி கழிவுகள், மீன் கழிவுகள் ஆகியவை மழை நீரில் நனைந்தும், அழுகியும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சிறு தரைக்கடை வியாபாரி–்கள் சிமென்ட் தளம் இல்லாததால்  மண் தரையில் சாக்கு விரித்து வி்ற்பனை செய்யும் காய்கறி வியாபாரி–்கள் இரு நாட்களாக பெய்த மழையால் வியாபாரம் தடைபட்டுள்ளது. மண் தரை முழுவதும் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.   

தென்னம்பாளையம் தினசரி மொத்த மார்க்கெட்டில் மீன் கழிவுகள், காய்கறி கழிவுகள் பல நாட்களுக்கு ஒரு முறை அகற்றப்படுகிறது. வளாகங்கள் முழுவதும் மேடு,பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் சமமாக நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து காய்கறி, மீன் மொத்த வியாபாரிகள் சிலர் கூறியதாவது.

மாநகராட்சி–்ககு வாடகையாக பல லட்சம் செலுத்தி வருகிறோம். முறையாக கழிவு நீர் செல்ல சாக்கடை இல்லை. மழை பெய்தாலோ, கழிவுநீர் அதிகமாக தேங்கி நின்றால் சேறும், சகதியுமாக உள்ளது. மொத்த மார்க்கெட் முழுவதும் மண் கொட்டி சமப்படுத்தி தார் ரோடு போட வேண்டும். தென்னம்பாளையம் மார்க்கெட்டின் அவல நிலையை பார்த்து வளாகம் முழுவதும் தார் ரோடு அமைக்க மாநகராட்சியும், மாவட்ட  நிர்வாகம் ஆகியவை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையெனில் மே 1ம் தேதி முதல் மொத்த காய்கறி சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள் சுங்க கட்டணம் செலுத்த போவதில்லை.  இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: