உயிர்பலி வாங்க காத்திருக்கும் அபாய குழியை மூட கோரிக்கை

திருப்பூர், ஏப்.22:  திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள டிகேடி பஸ் நிறுத்தம் அருகே சாலையில்  உயிர்பலி வாங்க காத்திருக்கும் அபாயகரமான குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகரின் உள்ள 6 பிரதான சாலைகளில் பல்லடம் சாலையும் ஒன்று. அந்த சாலையில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பனியன் உள்ளிட்ட சார்பு நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் அதிகளவில் பல்லடம் சாலையை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், இந்த சாலையில் உள்ள டிகேடி பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலையின் நடுவே திடீரென குழி ஏற்பட்டது. அந்த குழியை பல நாட்களாகியும் மூடப்படாமல் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கண்டும் காணாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இரவு நேரங்களில் இக்குழிக்குள் ஏறி, இறங்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் காயத்துடன் வீடு திரும்பி சென்றுள்ளனர். உயிர் பலி வாங்கும் முன்பாக இந்த அபாயகரமான குழியை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது குழியின் அருகே பழைய டயர்களை வைத்து சாலை நடுவே குழி இருப்பதை சுட்டி காட்டும் விதமாக அபாய எச்சரிக்கை அமைத்தனர்.

Related Stories: