பாலமலை வனப்பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் புள்ளிமான் சாவு

பவானி, ஏப். 22: பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள பாலமலை வனப்பகுதியில் போதிய மழையின்மையால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், செடி கொடிகள் காயந்ததோடு, தண்ணீர் இல்லாமல் குட்டைகள் வறண்டன.

இதனால், இப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் தேடி சமவெளிப் பகுதிக்கு வந்து செல்வதோடு, விளைநிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமலை பகுதியிலிருந்து ஊமாரெட்டியூர் வடக்குக்காடு பகுதிக்கு சுமார் ஒன்றரை வயதுடைய, ஆண் புள்ளி மான் தண்ணீர் தேடி வந்துள்ளது. இதை கண்ட நாய்கள் மானை துரத்தி கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் மானின் உடலைக் கைப்பற்றி பரிசோதனை செய்தனர். பின்னர் மானின் உடல்  அதே பகுதியில் புதைக்கப்பட்டது.

Related Stories: