கோடை மழை காரணமாக வனத்தில் தீ அபாயம் குறைந்தது

உடுமலை, ஏப். 22:உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் கோடை வெயில் காரணமாக அடிக்கடி தீப்பற்றியது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை வனத்தீ ஏற்பட்டது. வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோடைக்கு முன்பாகவே தீப்பிடிக்கும் அபாயம் உள்ள இடங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் கடும் வறட்சி காரணமாக செடி,கொடிகள் காய்ந்ததால் தீப்பிடிக்கும் நிலை ஏற்பட்டது. நீர் நிலைகள் வறண்டதால் வன விலங்குகளும் தண்ணீர் தேடி அலைபாய்ந்தன. வனத்தில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வந்தனர்.

இது போதுமானதாக இல்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை மழை பெய்தது. இதனால் அமராவதி, உடுமலை வனச்சரகங்களில் காய்ந்து கிடந்த செடி, கொடிகள் நனைந்து ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால் வனத்தீ பிடிக்கும் அபாயம் குறைந்துவிட்டது. வேட்டை தடுப்பு காவலர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல், வனவிலங்குகளுக்கும் தண்ணீர் கிடைத்துள்ளது.இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘ஓரிரு நாட்கள் பெய்த மழையால் தீ அபாயம் குறைந்துள்ளது. இருப்பினும் இன்னும் ஒரு மாதத்துக்கு கோடை வெயில் கொளுத்தும். இடையிடையே மழை பெய்தால் வனத்தீ ஏற்படுவதை தவிர்க்கலாம்’ என்றனர்.

Related Stories: