உடுமலை பேருந்து நிலையத்தில் நடைபாதையில் டீக்கடை ஆக்கிரமிப்பு

உடுமலை, ஏப். 22: கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் வசிக்கின்ற தென்மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும், பழனி, மதுரை, ராமேஸ்வரம், மூணார், கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உடுமலை நகரம் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய பொழுது போக்கு அம்சமாக அமராவதிஅணை, திருமூர்த்தி அணை மற்றும் முதலை பண்ணை, திருமூர்த்தி மலை அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில் போன்றவற்றிற்கு வந்து செல்லும் பயணிகள் உடுமலை வழியே தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பயணிகளுக்கு இடையூறாக பேருந்து நிலைய நடைபாதையில் பலரும் டீக்கடை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. பயணிகள் நிற்க கூட முடியாத அளவிற்கு நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் பேருந்துக்காக நீண்ட நேரம் நிற்கும் பயணிகள் உட்கார இடமின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். கிராமப்புற பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பலர் மழை வந்தால் கூட ஒதுங்குவதற்கு இடமின்றி மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நடப்பதற்கே இடமில்லாத வகையில் நடைபாதை சுருங்கிவிட்டது. எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, பயணிகளுக்கு இடையூறாக உள்ள டீக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: