×

நெகமத்தில் கோடை மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி, ஏப். 22: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில், தொடரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஆண்டு ஜூன் முதல் தொடர்ந்து பல மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்துள்ளது. கோடை மழை எப்போது பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பொள்ளாச்சி சமவெளி பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததுடன் நின்று போனது. பின் இரண்டு நாட்களுக்கு முன்பு, சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

இதில் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில், ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த 200 ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா ரக நெற்கதிர்கள்  சாய்ந்து சேதமானது. இதனால், நெல் சாகுபடி விவசாயிகள் மிகுந்த  வேதனையடைந்தனர்.

இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில், பொள்ளாச்சி நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளான ஆனைமலை, கோட்டூர், ஆனைமலை, பொன்னாபுரம், சமத்தூர், அம்பராம்பாளையம், நெகமம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல 2 மணிநேரத்திற்கு மேல் கனமழையாக பெய்தது. அதன்பின் விடிய விடிய சாரலுடன் தொடர்ந்து மழை பெய்தது.

இதில்,  சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக நெகமத்தில் மட்டும் 40மில்லி மீட்டர் என்ற அளவில் மழைப்பதிவாகியுள்ளது. பல மாதத்திற்கு பிறகு, சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்ததால்,  இந்த கோடை மழை இன்னும் வலுக்குமா என  விவசாயிகள் பலர் எதிர்பார்த்துள்ளனர்.  
நேற்று காலை நிலவரப்படி மழையளவு வருமாறு(மி.மீ): சோலையார் பகுதியில்  25மிமீ, ஆழியார் 8.4, வால்பாறை 26, மேல் நீரார் 22, கீழ் நீரார் 30, வேட்டைக்காரன்புதூர் 4, சர்க்கார்பதி 6,  மணக்கடவு 30.2, நல்லாறு 31, பொள்ளாச்சி 13, நெகமம் 40, சுல்தான்பேட்டை 13, கள்ளிபாளையம், 17.5மிமீ, என்ற அளவில் மழைப்பதிவாகியுள்ளது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...