×

குடியிருப்பு பகுதியையொட்டி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

பொள்ளாச்சி, ஏப். 22:  பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், அன்மை காலமாக சாக்கடை பராமரிப்பு என்பது முறையாக இல்லாததால் அப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. தற்போது பாதாள சாக்கடை பணி ஒருபக்கம் நடந்தாலும், அதை இன்னும் முழுமையாக நிறைவு செய்யாமல் ஆங்காங்கே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதில், பாலக்காடுரோட்டில் நகராட்சி ஜமீன்ஊத்துக்குளி எல்லைக்குட்பட்ட காந்திநகர் குடியிருப்பு பகுதியில்  சாக்கடை பராமரிப்பின்றி, கடந்த சில மாதமாக ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியிருப்பது அதிகரித்துள்ளது. இதில் சாக்கடை அடைப்பு எற்பட்டு செல்ல வழியில்லாமல், ஒரே இடத்தில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியும் அதிகரிக்கிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு மக்கள் அவதிப்படுகின்றனர். குடியிருப்பு அருகே தேங்கும் கழிவுநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியபோக்கால், தற்போது அந்த இடத்தில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...