அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

அந்தியூர், ஏப். 22:அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பச்சாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று அந்தியூர்-அம்மாபேட்டை செல்லும் ரோட்டில் பள்ளிபாளையம் பிரிவு என்ற இடத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மக்கள் மேல்நிலை தொட்டி பழுதடைந்து குடிநீர் வீணாகி வருவதால், தினமும் அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் கிடைப்பதாகவும், தங்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

 இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்துடன் பேசிய போலீசார் மேல்நிலை குடிநீர் தொட்டி இணைப்புகளை சரி செய்து உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.இந்த சாலை மறியலால் நேற்று காலை 8 மணி முதல் 9 மணி வரை அந்தியூர்-அம்மாபேட்டை செல்லும் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: