ஓமலூர் அருகே ரயில்வே நிர்வாகம் கட்டிக் கொடுத்தும் பாலப்பணிகளை தாமதப்படுத்தும் மாநில அரசு

ஓமலூர், ஏப்.22: ஓமலூர் அருகே இருப்பு பாதையை கடக்க வசதியாக மத்திய ரயில்வே நிர்வாகம் பாலம் அமைத்து கொடுத்துள்ள நிலையில், மேற்கொண்டு பணிகளை மாநில அரசு தாமதப்படுத்தி வருவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரமச்சூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக ஓமலூரில் இருந்து முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி, பழையூர், சேலம் ரயில் நிலையம், இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மாநில அரசின் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே சேலம்பெங்களூரு செல்லும் ரயில்வே இருப்புபாதை உள்ளது. அதனால், இந்த சாலையின் குறுக்கே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும், ரயில் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மத்திய மாநில அரசுகள் இணைந்து பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டன. இதனைத்தொடர்ந்து மத்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வே தண்டவாள பகுதியில் தரமான பலத்தை அமைத்து கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அந்த பாலம் மட்டும் அந்தரத்தில் தொங்குவது போல் காணப்படுகிறது. ஆனால், மாநில அரசு சார்பில் கட்டவேண்டிய பாலப்பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இதனால், அந்த வழியாக நிரந்தரமாக போக்குவரத்து பதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே கேட் பகுதியில் மண் கொட்டப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. மேலும், பாலம் கட்டப்பட்ட நிலையிலும் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் கேட்டை மூடி திறந்து பணியாற்றி வருகிறார். மேலும், தற்காலிகமாக அதே பகுதியில் உள்ள தரைப்பாலத்தை அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே மேம்பாலம் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளாகிய நிலையிலும் அதிமுக அரசால் மேம்பாலம் அமைத்து, சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் நகரம் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்ல 10 கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: