மாவட்டம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் ஆய்வு

கோவை, ஏப். 22: கோவை மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் குறித்த ஆய்வு பணி நடந்து வருகிறது. இந்த பள்ளிகளின் பட்டியலை இரண்டு நாட்களில் அறிக்கையாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், நர்சரி பிரைமரி பள்ளிகள் தங்களின் பள்ளி அங்கீகாரத்தை ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். கட்டிட அங்கீகாரம் உள்ள பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும், தீத்தடுப்பு வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் பல பள்ளிகள் அங்கீகாரமின்றியும், விதிமுறைகளை மீறியும் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை வட்டாரங்களில் 44 மழலையர் பள்ளிகள், 12 நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், பேரூர் கல்வி மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு ஆகிய வட்டாரங்களில் 53 மழலையர் பள்ளிகள், 5 நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள், எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் சூலூர் வட்டாரத்தில் 14 மழலையர் பள்ளிகள், 4 நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 132 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் இந்த பள்ளிகளை மூட வலியுறுத்தப்பட்டது.

 இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகள் தங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் காலஅவகாசம் வழங்கியது. அதன்படி, வரும் 24ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் தங்களின் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த பள்ளிகள் குறித்த தகவல்களை ஆய்வு செய்ய 15 வட்டார வள மையத்திற்கும் வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர், மூத்த தலைமை ஆசிரியர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பள்ளிகளில் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

 இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “அங்கீகாரம் தொடர்பான பள்ளிகள் தங்களின் அங்கீகாரம் புதுப்பிக்கவும், விதிமுறைகளின் படி செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளின் பட்டியல் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், தங்களின் அறிக்கையை இரண்டு நாட்களில் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பட்டியல் பற்றி தெரியவரும்” என்றனர்.

Related Stories: