வேதாரண்யம் தாலுகாவில் 24மணிநேரமும் எரியும் தெருவிளக்குகள் அரசு பணம் விரயம்

வேதாரண்யம், ஏப்.22:  வேதாரண்யம் தாலுகாவில் பல்வேறு ஊராட்சிகளில் கஜா புயலுக்கு பிறகு இரவு பகல் என 24   நேரமும் தெருவிளக்குகள்  எரிந்து கொண்டிருக்கின்றன.  இதனால் மின்சாரம் வீணாகி வருகிறது.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி கஜா புயல் வீசியது.  இந்த புயலில் 45 ஆயிரம் மின்கம்பங்கள்  முறிந்து விழுந்தன.  இதனால் ஒரு மாதமாக முற்றிலும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.   போர்கால அடிப்படையில் ஆந்தரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 7 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பணியாற்றி 35நாட்களுக்கு பிறகு  மின் விநியோகம் வழங்கப்பட்டது.

அதிலிருந்து படிப்படியாக மூன்று மாதங்களில் அனைத்து மின்பாதைகளும் சரிசெய்யப்பட்டு நூறு சதவீதம் மின்விநியோகம்  வழங்கப்பட்டது.  அதன்பிறகு தெருவிளக்குகள் அனைத்தும் எரிய துவங்கின.  வேதாரண்யத்தில் 36 ஊராட்சிகளிலும் வேதாரண்யம் நகராட்சி தலைஞாயிறு ஊராட்சிகள் பேரூராட்சிகள் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியவிடப்பட்டன. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தெருவிளக்குகள் அனைத்தும் இரவு பகல் என 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கின்றன.  இதனால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.  பகலில் தெருவிளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகுவதுடன் மின்வாரியத்திற்கு இழப்பும் ஏற்படுகிறது.  இதுகுறித்து மின்சாரதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது அனைத்து தெருவிளக்குகளும் நேரடியாக மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தெருவிளக்குகளை எரிய விடுவதற்கும், அமைப்பதற்கும்  சுவிட் அமைக்காமல் நேரடியாக   மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றனர். எனவே மின்சாரம் வீணாவதை தடுப்பதற்கும், மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்   எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: