கொள்ளிடத்தில் திடீர் சாலை மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு பதிவு

கொள்ளிடம், ஏப்.22: கொள்ளிடம் அருகே புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் நேற்று முன்தினம் கொள்ளிடம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி செயலாளர் ரஞ்சித் தலைமையில், பொன்பரப்பி கிராமத்தில் பாமகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியதை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த டிஎஸ்பி வந்தனா, கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

Advertising
Advertising

இதனையடுத்து நாகை எஸ்பி விஜயக்குமார் உத்தரவின் பேரில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கொள்ளிடம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி செயலாளர் ரஞ்சித், சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் இனியவன், முகாம் அமைப்பாளர்கள் அன்புராஜ், பாக்கியராஜ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாக சாலையில் ஒன்று கூடுதல், சாலையை மறித்து போக்குவரத்தை தடைசெய்தல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆனந்தக்கூத்தன் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவா(30) என்பவரை கைது செய்து தலைமறைவான மீதமுள்ளோர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: