பவானிசாகர் அருகே வாழை தோட்டத்தில் யானை அட்டகாசம்

சத்தியமங்கலம்,  ஏப். 22: பவானிசாகர் அருகே வாழை தோட்டத்தில் ஒற்றை யானை புகுந்து  அட்டகாசம் செய்து வருகிறது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட  காட்டு யானைகள் உள்ளன. தற்போது வன பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால்,  யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு  வெளியேறி கிராமங்களில் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள வாழை, கரும்பு,  மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகின்றன. பவானிசாகர்  பகுதியில் ஒற்றை யானை கடந்த ஒரு வார காலமாக தினமும் இரவில் வாழைத்  தோட்டங்களில் புகுந்து சேதம் செய்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம்  இரவு 12 மணியளவில் பவானிசாகர் போலீஸ் குடியிருப்பு எதிர்புறம் உள்ள கோட்டை  கோயில் தோட்டம் துரைசாமி (80) என்பவரது விளை நிலத்தில் புகுந்த ஒற்றை யானை  அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஜி9 ரக வாழைகளை மரங்களை தின்றும்  மிதித்தும் சேதப்படுத்தியது. அப்பகுதி விவசாயிகள் யானையை பட்டாசு வெடித்து  விரட்ட முயற்சித்தும் யானை வாழைத் தோட்டத்தை விட்டு நகராமல் வாழை மரங்களை  சேதப்படுத்தியபின் அதிகாலை 5 மணியளவில் வனப்பகுதிக்கு சென்றது. இப்பகுதியில் தொடர்ச்சியாக ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால், ஒற்றை  யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க  வேண்டும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என  அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: