தேர்தல் பறக்கும்படைகள் கலைப்பு நாளை முதல் வழக்கமான பணியில் ஈடுபடுவர்

ஈரோடு, ஏப். 22:மக்களவை தேர்தலையொட்டி அமைக்கப்பட்டிருந்த பறக்கும்படை குழு கலைக்கப்பட்டுள்ளதையடுத்து நாளை முதல் வழக்கமான பணிகளில் அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் கூறினர். மக்களவை தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாத வகையிலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை மற்றும் நிலைக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுக்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டாட்சியர்கள், வேளாண்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பறக்கும்படையினர் வாகன சோதனை, பணப்பட்டுவாடா தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வாக்குப்பதிவு பணிகள் முடிவடைந்ததையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பறக்கும்படைகள் கலைக்கப்பட்டு அன்றாட பணிகளை கவனிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக பறக்கும்படையில் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதையடுத்து நாளை 22ம் தேதி முதல் அந்தந்த அலுவலகங்களில் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories: