காவிரி டெல்டாவை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தஞ்சை, ஏப். 22: காவிரி டெல்டா மாவட்டத்தை பெட்ரோலியகெமிக்கல் மண்டலமாக மாற்றும் மத்திய அரசு தனது நடவடிக்கையை கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி தெரிவித்திருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்து வகையான எரிவாயு திட்டத்தை காவிரி டெல்டா பகுதியில் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பல கட்டமாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பம் செய்தது. கடலூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்கட்டமாக 40 இடங்களில் கிணறுகள் அமைக்க ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் காவிரி டெல்டா மக்களின் கோரிக்கையை புறக்கணித்து ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டத்தில் அவசர அவசரமாக பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறையின் இந்த நடவடிக்கையால் காவிரி டெல்டா மாவட்டமே அழிந்துவிடும். எனவே ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனே திரும்ப பெற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டத்தை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் மத்திய அரசு தனது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: