மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ புகைமண்டலமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சை, ஏப். 22: தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீபற்றி எரிய தொடங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதி புகைமண்டலமாக மாறியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.தஞ்சை சீனிவாசபுரம் அருகே உள்ள ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் மாநகரில் 51 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறத்தாழ 120 டன்கள் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கிடங்கில் கோடைகாலத்திலும், வெப்பம் அதிகமாக உள்ள நாட்களிலும் தீவிபத்து ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த கிடங்கில் நேற்று திடீரென தீ பற்றி எரிந்தது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  ஆனால் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே  அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை பரவி இருந்தது. இதன் காரணமாக நடந்து சென்றவர்களும், வாகன டிரைவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அப்பகுதியில் வசிப்பவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர்.

Related Stories: