தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து வழிந்தோடும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் மக்கள்

தஞ்சை, ஏப்.22: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து பொங்கி வழிந்தோடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.தஞ்சை நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால் இன்று வரை பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சீர் செய்வது, பாதாள சாக்கடையில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வது என்று எதையும் செய்ய முடியாத நிலையிலே மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹேலில் இருந்து தினம்தோறும் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி அருகில் உள்ள மழைநீர் செல்லும் வாய்க்காலில் விழுந்து தேங்கி விடுகிறது. இதனால் அந்த பகுதியில் எந்த நேரமும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் இடமாகவே மாறிவிட்டது. இதனால் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை வழியாக பொதுமக்கள் செல்வதற்கே அச்சம் அடைகின்றனர். அந்த பகுதியில் வசிப்பவர்கள் பலமுறை மாநகராட்சியில் முறையீடு செய்தும் பலனில்லை. இதற்கு காரணம் காலை நேரங்களில் அந்த பகுதியில் வசிப்பவர்கள் தண்ணீர் பயன்பாடு அதிகளவில் இருப்பதால் மோட்டார் அந்த தண்ணீரை உறிஞ்சி வேறு இடத்திற்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே தான் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்படி எந்த நேரமும் பாதாள சாக்கடை கழிவுநீர் பொங்கி வெளியேறுகிறது. அதேபோல் மின் தடை ஏற்பட்டாலும் இப்படி தான் பாதாள சாக்கடை கழிவுநீர் இந்த மேன்ஹோலில் இருந்து வெளியேறும். இதற்கு தண்ணீரை உறிஞ்சும் மோட்டார் குதிரை திறனை மாற்ற வேண்டும். அப்போது தான் நிரந்தர தீர்வு காண முடியும் என்று மாநகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: