×

கரூர் செல்லும் பேருந்துகள் தாந்தோணிமலை பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

கரூர், ஏப். 22: தாந்தோணிமலை பஸ் ஸ்டாப் அருகே கரூர் செல்லும் பேரூந்துகள் அனைத்தும் நிழற்குடையின் அருகில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை நகராட்சி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. 50ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.கரூரில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கிருந்து சென்று வருகின்றனர். திண்டுக்கல், பாளையம், குஜிலியம்பாறை, வெள்ளியணை, மணப்பாறை போன்ற பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து பேரூந்துகளும் தாந்தோணிமலை பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஆனால், பேரூந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வசதியாக பழைய நகராட்சி அலுவலகம் அருகே நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், பேரூந்துகள் அனைத்தும் இந்த பகுதியில் நின்றுதான் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, அனைத்து பேரூந்துகளும் சற்று முன்னே தள்ளி, கல்யாண வெங்கட்ரமண கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் தான் நின்றுதான் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.

இதனால், இந்த பகுதியில் இருந்து எதிர்ப்புறம் உள்ள தனியார் நர்சரி பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைவரும் பேரூந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தள்ளி நிற்பதால்  கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் சிறு சிறு விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, இதனை முற்றிலும் தடுக்கும் வகையில், பேரூந்துகள் அனைத்தும் நிழற்குடை அருகில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின்  கோரிக்கையாக உள்ளது.அதிகாரிகள் இதனை பார்வையிட்டு பேரூந்துகள் அனைத்தும், அறிவுறுத்தப்பட்டுள்ள பகுதியில் நின்று செல்ல தேவையான  நடவடிக்கை எடுக்க வேண்டும்   என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur ,bus stop ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்