திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகளில் திமுகவினர் தீவிரம்

திருப்பரங்குன்றம், ஏப்.22: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகளில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வருகின்ற மே.19ம் தேதி இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று 22ம் தேதி துவங்கி 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மற்ற அரசியல் கட்சிகள் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே திமுக சார்பில் டாக்டர் சரவணன் வேட்பாளராக களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கழக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, கோ.தளபதி, தங்கம்தென்னரசு, பெரியகருப்பன், சேகர்பாபு, கல்யாணசுந்தரம், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தது. இதனையடுத்து திருப்பரங்குன்றம், அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகளை வேட்பாளர் சரவணன் சந்தித்து தொகுதிக்குள் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரம் குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் ஆகியோரும் பகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணி குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவினர் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவது மற்ற அரசியல் கட்சியினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: