மதுரை காமராஜர் பல்கலை.யில் அடுத்த ஆண்டு முதல் அரபி, உருதுக்கு தனித்துறைகள் துணைவேந்தர் தகவல்

மதுரை, ஏப். 22: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் அரபி, உருதுக்கு தனித்துறைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் கிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதில் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய துறைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகளுக்கு பேராசிரியர்கள் உள்ளனர். ஆனால், காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூலம் அனுமதி பெற்று இயங்கி வரும் சுமார் 150க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் உள்ள கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய பாடப்பிரிவுகள் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்விப்பேரவை கூட்டம் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் சுமார் 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் கல்வி வளர்ச்சி குறித்தும், புதிய பாடத்திட்டம், புதிய பாடப்பிரிவுகள் துவங்குவது குறித்தும் தங்களது கருத்துக்களை ெதரிவித்தனர்.

அப்போது மதுரை வக்பு வாரியக்கல்லூரி முதல்வர் அப்துல் காதிர், ‘காமராஜர் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்று இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் கூட கன்னடம், தெலுங்கு பாடப்பிரிவு இல்லை. ஆனால், 2 கல்லூரிகளில் அரபி, உருது ஆகிய மொழிகளை சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால், இவற்றுக்கு பல்கலைக்கழகத்தில் துறைகள் இல்லை. அதனால் அரபி, உருது மொழிக்கு தனித்துறைகள் ஏற்படுத்த வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். இந்நிலையில் துணைவேந்தர் கிருஷ்ணன், அப்துல்காதிரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டு முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரபி, உருது மொழிக்கு துறைகள் ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இது குறித்து வக்பு வாரியக்கல்லூரி முதல்வர் அப்துல் காதிரிடம் கேட்டபோது, ‘50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதுவரை அரபி, உருது மொழிக்கு தனித்துறைகள் இல்லை. இதற்கு தனித்துறைகள் ஏற்படுத்த வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்தேன். எனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதற்கு துணைவேந்தருக்கும், பல்கலை. நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: