திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் துவக்கம்

மதுரை, ஏப். 22: திருப்பரங்குன்றம், சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சீனிவேல் பதவி ஏற்காமல் இறந்தார். இதனால், இத்தொகுதியில் அதே ஆண்டு நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்தாண்டு 2018 செப்டம்பரில் இறந்தார். அவர் அதிமுக வேட்பாளராக இத்தொகுதியில் போட்டியிட்ட போது கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழில் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கையெழுத்து போடவில்லை. அதற்கு பதிலாக கை நாட்டு இருந்தது. அந்த கைநாட்டு ஜெயலலிதாவினுடையது இல்லை என திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம் எம்எல்ஏ போஸ் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு கூறியது.

இதனால் இத்தொகுதிக்கு வரும் மே.19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 29ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்.30ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மே 3ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர்களின் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் திருநகரில் இருந்து தனக்கன்குளம் செல்லும் ரோட்டில் உள்ள திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக தாசில்தார்கள் நாகராஜன், கோபி, அனீஸ்சர்தார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வரும் போது 3 வாகனத்தில் மட்டுமே வர அனுமதி உண்டு. அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் முன்பாக இறங்கி நடந்து சென்று மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வரும் போது அவருடன் சேர்ந்து முன்மொழிபவர்கள் உள்பட 5 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். சுயேட்சை வேட்பாளர்களுக்கு இத்தொகுதியை சேர்ந்த 11 பேர் முன்மொழிந்து இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் துவங்குவதால், தாலுகா அலுவலகம் மற்றும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: