ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் செயல்படாத தண்ணீர் தொட்டிகள் கிராமமக்கள் அவதி

செம்பட்டி, ஏப்.22: ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் தண்ணீர் தொட்டிகள் செயல்படாமல் உள்ளன. இதனால் தண்ணீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர்.

சின்னாளபட்டி அருகே ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ஆலமரத்துப்பட்டி, ரெங்கநாதபுரம், அண்ணாமலையார்மில்கேட், ரத்தினகிரி, சாந்திநகர், வரதராஜபுரம், தெற்குத்தோட்டம், போக்குவரத்து நகர் உட்பட 10 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. போக்குவரத்து நகர் பகுதியில் போக்குவரத்துத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் (கண்டக்டர், நடத்துனர்கள்) அதிக அளவில் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக குடிதண்ணீர் மற்றும் வெளி உபயோகத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் அவலநிலையில் உள்ளனர். இதுகுறித்து இந்த பகுதி மக்கள் ஊராட்சி செயலரிடம் கேட்டால், அதிகம் பேசினால் வருகின்ற தண்ணீரும் வராது என மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுபோல ரெங்கநாதபுரத்தில் சுமார் 40 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ரெங்கநாதபுரம் பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு. அந்த ஆழ்துளை கிணறுகளும், தண்ணீர் தொட்டியும் தற்போது காட்சிப் பொருளாய் உள்ளன. ஆத்தூர் யூனியன் அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் பலமுறை  வட்டாரவளர்ச்சி அலுவலர்களிடம் மனு கொடுத்தும் தங்கள் கிராமத்தில் குடிதண்ணீர் பிரச்சனை தீரவில்லை என்று கிராம மக்கள் புலம்புகின்றனர். எனவே இப்பகுதிகளில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: