‘கப்’ தாங்க முடியவில்லை சிறுநீர் கழிப்பிடமான ஜிஹெச் சுவர் நோயாளிகள் கடும் அவதி

திண்டுக்கல், ஏப்.22: திண்டுக்கல் அரசு மருத்துவமனை சுவரை சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். கம்பி வேலி அமைத்தும் பயனில்லாமல் உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுவரை சிலர் சிறுநீர் கழிக்கவும், கழிப்பறையாகவும் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் இட்லி, டீக்கடைகள் வைத்துள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் கழிவுநீரை காம்பவுண்ட் சுவரை சுற்றியே ஊற்றுகின்றனர். இதனால் கொசு, ஈக்கள், பூச்சிகள் நோயாளிகளை தாக்குகின்றன. அரசு மருத்துவமனைக்குள் அமர முடியாமல் துர்நாற்றமும் வீசுகிறது. இந்த அவலத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு மருத்துவமனை வளாகத்தை சுற்றி புதிய காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டது.

காம்பவுண்ட் சுவரை சுற்றி பொதுமக்கள் அசுத்தம் செய்யாமல் இருக்க கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதையடுத்து காம்பவுண்ட் சுவரில் கர்ப்பத்தடை, குழந்தைகள் நலத்திட்டம், தாக்கும் நோய்கள், சத்தான உணவுகள் உட்கொள்வது, நல்ல குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது உட்பட பல தகவல்கள் படத்துடன் எழுதி இருந்தனர். இதனிடையே அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள காம்பவுண்ட் சுவர் கம்பிகளை சிலர் உடைத்துவிட்டனர். மேலும் லாரி, சரக்கு லாரி, வேன்கள், ஆட்டோக்களை காம்பவுண்ட் சுவரை சுற்றி நிறுத்தி அசுத்தம் செய்கின்றனர். இதனால் மீண்டும் துர் நாற்றம் வீசத்துவங்கியுள்ளது. நோயாளிகள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர், இது குறித்து மருத்துவத்துறை அதிகாரியிடம் கேட்ட போது, ‘‘அரசு மருத்துவமனையை சுற்றி அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். மீண்டும் கம்பி வேலி அமைப்பதற்கு நடவடி–்கை எடுக்கப்படும்’’  என்றார்.

Related Stories: