தேர்தல் முடிந்ததால் வாகன சோதனை இனி இருக்காது அவதியடைந்த வியாபாரிகள் நிம்மதி

திண்டுக்கல், ஏப்.22: மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வந்த வாகன சோதனை கெடுபிடிகள் இனி இருக்காது என்பதால் வியாபாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துவிட்டன. இதற்கான அறிவிப்பு மார்ச் 10ல் வெளியானதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன பரிசோதனையில் தேர்தல் கமிஷன் தீவிர கவனம் செலுத்தியது. வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க மாவட்டத்தில் உள்ள செக் போஸ்ட்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் மளிகை, அரிசி, காய்கறிகள், இரும்பு பொருட்கள், ஸ்டேசனரி, பூ, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் நடத்துபவர்கள் மதுரை உள்பட வெளிமாவட்டங்களிலேயே பொருட்கள் கொள்முதல் செய்கின்றனர்.

கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான பணத்தை வியாபாரிகளில் பெரும்பாலோனோர் நேரடியாக கொண்டு செல்கின்றனர். வங்கி மூலம் பரிமாற்றம் செய்வது கிடையாது. சொந்தமான அல்லது வாடகை சரக்கு வாகனங்கள், கார்களில் சென்று பொருட்களை கொள்முதல் செய்வது வழக்கம். இந்நிலையில் ரூ.50ஆயிரம் வரை மட்டுமே பணம் கொண்டு செல்லலாம், அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவால் வியாபாரிகள் கடும் அவதியடைந்தனர். இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்தன. திண்டுக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 80 சதவீதம் வியாபாரிகளிடம் இருந்து தான் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தேர்தல் முடிந்துவிட்டது. நடத்தை விதிமுறைகள் மே 23 வரை அமலில் இருந்தாலும் இனி வாகன பரிசோதனை இருக்க வாய்ப்பில்லை என்பதால் வியாபாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

வியாபாரிகள் கூறுகையில், ‘‘கடைகளில் வியாபாரம் முடித்துவிட்டு பணத்தை எடுத்து கொண்டு பொருட்கள் கொள்முதல் செல்வோம். இதற்கு எந்த ஆவணத்தை கொண்டு செல்வது. யாரிடமாவது கடன் பெற்று சென்றால் அந்தப்பணத்திற்கு எந்த ஆவணம் இருக்கும். வியாபார பணத்தை வங்கியில் செலுத்தி மீண்டும் அதை எடுத்துச்சென்றால் மட்டுமே ஆவணம் கொண்டு செல்ல முடியும். பணத்தை பறிமுதல் செய்து கொண்டு ஏதேனும் ஆவணம் கொண்டு வந்தால் மட்டுமே மீண்டும் வழங்குவர். இதனால் தேவையற்ற குழப்பமும், அலைச்சலும், தொழில் பாதிப்பும் ஏற்பட்டது. அரசியல் கட்சிகளுக்காக செயல்படுத்தப்படும் நன்னடத்தை விதிமுறைகளால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் எங்கள் பணிகளை நிம்மதியாக செய்யலாம்’’ என்றனர்.

Related Stories: