சர்ச்களில் சிறப்பு வழிபாடு

நத்தம், ஏப்.22: நத்தம் செந்துறையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பங்கு தந்தையர்கள் ஆரோக்கியம், அருள்செல்வமணி ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து உயிர்ப்பு பெருவிழா நிகழ்ச்சியான ஒளி, இறைவாக்கு, திருமுழுக்கு, நற்கருணை வழிபாடுகள் நடந்தன. ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்திகளை திருப்பலி பீடத்தின் முன் ஏற்றப்பட்டிருந்த பாஸ்கா ஒளிவிளக்கில் இருந்து எரியச்செய்தனர். தூய வளனார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலியும் நடந்தது. இதேபோல் சி.எஸ்.ஐ தூய பவுல் ஆலயம், டி.இ.எல்.சி உட்பட பல இடங்களில் சிறப்பு பிரார்த்தனையும், ஆராதனையும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் திருப்பலி பூஜைகள் நடந்தது. கொடைக்கானல் வட்டார அதிபரும் மூஞ்சிக்கல் தந்தையுமான அருட்தந்தை எட்வின் சகாய ராஜா தலைமையில் ஈஸ்டர் திருவிழா சிறப்பு திருப்பலி பூஜைகள் நடந்தது. இதேபோல உகார் தே நகர் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டர் சகாய ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. செண்பகனூர் ஆலயத்தில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி பூஜைகள் பங்குத்தந்தை ஏஞ்சல் தலைமையில் நடந்தது. பாக்கியபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அடைக்கல ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடந்தது. இதேபோல் பெருமாள்மலை தேவாலயத்தில் பங்குத்தந்தை தண்ணீர் ராஜா தலைமையில் ஈஸ்டர் திருவிழா சிறப்பு திருப்பலி பூஜைகள் நடந்தது.

Related Stories: