செய்துங்கநல்லூரில் பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய நலக்கூடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செய்துங்கநல்லூர், ஏப். 22: செய்துங்கநல்லூரில் பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய நலக்கூடத்தினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரம் செய்துங்கநல்லூர். இங்கு ரயில் நிலையம், கருங்குளம் ஒன்றிய அலுவலகம், மின்வாரிய அலுவலகம், தபால் நிலையம், கல்வி நிறுவனங்கள்   உள்பட பல நிறுவனங்கள் உள்ளன. செய்துங்கநல்லூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட 8 குக்கிராமங்களில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினமும் வெளியூர் செல்ல செய்துங்கநல்லூர் வந்து செல்கின்றனர். செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் கூடும் சந்தையில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறி, மீன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த 1996ம் ஆண்டு செய்துங்கநல்லூரில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. குறைந்த கட்டணம் என்பதால் இதனை இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

அதன்பிறகு இந்த சமுதாய நலக்கூடத்தினை மேம்படுத்தவே இல்லை. கழிவறை வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதற்கிடையில்  புதன்கிழமை சந்தை விரிவு படுத்தப்பட்டது. அப்போது சமுதாய நலக்கூட வளாகத்திலும் கடைகள் வைக்கப்பட்டன. மற்ற நாள்களில்  இலவச கண்சிசிச்சை முகாம், மருத்துவ முகாம், அரசு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. தற்போது இந்த சமுதாய நலக்கூடம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது.  இதுகுறித்து   இப்பகுதி மக்கள்  கூறுகையில், ஏழை எளிய மக்களுக்கு இந்த சமுதாய நலக்கூடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இங்கு கழிவறை வசதி இல்லை.  மண்டபத்தில்  கட்டப்பட்ட சமையலறை உடைந்து கிடக்கிறது. இந்த சமுதாய நலக்கூடத்தினை மேம்படுத்தினால்   மக்கள் பயன்  பெறுவார்கள். தற்போது சந்தையை மேம்படுத்த அரசு நிதி ஒதுககீடு செய்துள்ளது. இந்த பணத்தில் சமுதாயநலக்கூடத்தினை மேம்படுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: