மருதூர் மேலக்காலில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு தூர்வார விவசாயிகள் கோரிக்கை

செய்துங்கநல்லூர், ஏப்.22: தாமிரபரணியில் 7வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இதில் மருதூர் மேலக்கால்வாய் மிக நீளமான கால்வாய். குட்டைக்கால் குளம், கொள்ளீர்குளம், செய்துங்கநல்லூர் குளம், நாட்டார்குளம், தூதுகுழிகுளம், கருங்குளம், பெட்டைகுளம், கிருஷ்ணன்குளம், வீரளபேரிகுளம், கால்வாய்குளம், தென்கரைகுளம், நொச்சிகுளம், முதலாம்மொழி குளம், வெள்ளிக்காய்யூரணி குளம், தேமாங்குளம், புதுக்குளம் உள்பட பல குளங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது.  சாத்தான்குளம் பகுதியில் உள்ள வறட்சியை போக்க கூடிய சடையனேரி, புத்தன்தருவை குளங்களுக்கும் மழைக்காலங்களில் இங்கிருந்து தான் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. இந்த கால்வாயில் கூடுதல் தண்ணீர் எடுக்க முடியவில்லை என சுமார் 25 கோடி ரூபாயில் பல்வேறு மராமத்து பணிகள் நடத்தப்பட்டது. ஆனாலும் போதிய அளவு தண்ணீர் கொண்டு செல்லும் அளவுக்கு இந்த கால்வாய் இல்லை. இக்கால்வாயில் தற்போது அமலைச்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பினை கொண்டது மருதூர் மேலக்கால்வாயை சீரமைக்க பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் போதிய தண்ணீர் எடுக்க முடியவில்லை. பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்த போது அந்த தண்ணீர் முறையாக குளங்களுக்கு போய் சேரவில்லை. இந்த கால்வாயில் ஆங்காங்கே அடர்ந்து காணப்படும் அமலைச்செடிகளே காரணம். எனவே பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் முன்பு அமலைச்செடிகளை அகற்ற வேண்டும். மேலும் தூர்ந்து கிடக்கும் கால்வாயை தூர்வாரி, கரையோரத்தில்இருந்து முள்செடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தாமிரபரணியில் கார், முன்கார், பிசானம் ஆகிய மூன்று சாகுபடியும் தரக்கூடிய ஒரே இடம் மருதூர் மேலக்கால்வாய். எனவே இந்த கால்வாயை சீராக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: