உடன்குடி துறைமுக பணி டாரஸ் லாரிகளில் பாதுகாப்பில்லாமல் கொண்டு செல்லப்படும் பாறாங்கற்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

உடன்குடி, ஏப்.22: உடன்குடி கல்லாமொழி துறைமுகப்பணிக்கு டாரஸ் லாரிகளில் முறையான பாதுகாப்பில்லாமல் கொண்டு செல்லப்படும் பாறாங்கற்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடைந்துள்ளனர். உடன்குடி அருகேயுள்ள கல்லாமொழி பகுதியில் துறைமுக பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த பணிக்கென சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் பாறாங்கற்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. பன்னம்பாறை, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, திருச்செந்தூர் வழியாக இயக்கப்படும் டாரஸ் லாரிகளில் அதன் உயரத்தை விட அதிகளவில் உயரமாக பாறாங்கற்களை ஏற்றிச் செல்கின்றனர். எவ்வித பாதுகாப்புமின்றி ஏற்றிச் செல்லப்படும் பாறாங்கள் திடீரென லாரி ஓட்டுநர்கள் போட்டி, போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திச் செல்லும் போதும், கட்டுப்பாடில்லா வேகத்துடன் செல்லும் போது பாறாங்கற்கள் சாலையில் விழுகின்றன. இதனால் லாரியின் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.

இதுகுறித்து போலீசாரும் சரி, வருவாய்த்துறையினரும் சரி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்காவிட்டாலும் அதிக பாரத்துடன் இயக்கப்படும் லாரி ஓட்டுநர்களை பாதுகாப்பாக கொண்டு செல்லுமாறு எச்சரிக்கை கூட செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்பட வேண்டிய நிலையுள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து முறையாக, பாதுகாப்புடன் பாறாங்கற்களை கொண்டு செல்ல அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: