தேவாலயங்களில் வெடிகுண்டு சோதனை

புதுச்சேரி, ஏப். 22:     இலங்கை சம்பவத்தின் எதிரொலியாக புதுச்சேரியில் முக்கிய தேவாலயங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுக்க நேற்று கொண்டாடப்பட்டது. இதேபோல இலங்கையிலும் பல்ேவறு பகுதிகளில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஈஸ்டரையொட்டி இலங்கை தலைநகர் கொழும்பு பகுதியில் மக்கள் தேவாலயங்களில் வழிபாடு நடத்தியபோது, அடுத்தடுத்து 3 தேவாலயங்களில் குண்டு வெடித்தது. மேலும் இதேபோல் நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்தது. இதில் 150க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் இந்தியாவிலும் இதுபோன்று அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தூய இதய ஆண்டவர் தேவாலயம், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி தேவாலயம் உள்ளிட்டவற்றில் வெடிகுண்டு நிபுணர்களுடன் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான ஒதியஞ்சாலை போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோப்பநாய் உதவியுடன் தேவாலயத்தின் பல்வேறு பகுதிகளில் அங்குலம், அங்குலமாக சோதனையிட்டனர். சோதனையின்போது தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சோதனையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதை அவர்களுக்கு போலீசார் விளக்கியதால் இயல்பு நிலை ஏற்பட்டது.

Related Stories: