×

தேர்ச்சி விகிதத்தில் 80 சதவீதம் கூட எட்டாத மாணவர்கள்

புதுச்சேரி, ஏப். 22:  பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் 90.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 80 சதவீதத்தை கூட எட்டவில்லை. இனி வரும் காலங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்காக, இலவச பாடநூல், மதிய உணவு, சீருடை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், அரசு பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. பல பள்ளிகளில் ஆசிரியர்களை விட குறைவான மாணவர்கள் இருப்பதால், அப்பள்ளிகள் மூடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 இதுபோன்ற சூழலில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடும் சரிவை சந்தித்து வந்தது. குறிப்பாக, கடந்தாண்டு 73.36 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்ச்சி விகிதம் என்பது கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக விழுப்புரம் பெற்ற தேர்ச்சி விகிதத்தை விட மிகவும் குறைவானது. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, புதுச்சேரி கல்வித்துறை அரசு பள்ளிகளின் கல்வித்துறை தரத்தை உயர்த்தவும், பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அதன் பலனாய் இந்தாண்டு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.62 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்தாண்டை விட 11.86 சதவீதம் அதிகம். வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே  அதிகமாக தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவிகள் 90.97 சதவீதமும், மாணவர்கள் 78.11 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர். சிறப்பு வகுப்பு, திறன் குறைந்த மாணவர்கள் மீது கூடுதல் கவனம் என கல்வித்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் எதிர்பார்த்த அளவுக்கு மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 80 சதவீதம் கூட எட்டாதது ஏமாற்றம் அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், மாணவிகள் படிப்பில் காட்டும் ஆர்வத்தை மாணவர்கள் காட்டுவதில்லை. இதன் காரணமாகவே மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. கடந்த 2012ல் 68.09 சதவீதம், 2013ல் 74.28 சதவீதம், 2014ல் 74.36 சதவீதம், 2015ல் 68.05 சதவீதம், 2016ல் 66.58 சதவீதம், 2017ல் 63.44 சதவீதம், 2018ல் 64.63 சதவீதம், 2019ல் 78.11 சதவீதம் என குறைவாகவே மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் இந்தாண்டுதான் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. இதற்கு கல்வித்துறை எடுத்த நடவடிக்கைதான் காரணம். இருப்பினும், மாநில தேர்ச்சி விகிதத்தை விட அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 14.83 சதவீதம் குறைவாகவே உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவிகள் போட்டி போட்டு படிக்கின்றனர். ஆனால், மாணவர்கள் படிப்பில் போதிய ஆர்வம்காட்டாததால் தேர்ச்சி விகிதம் குறைய காரணமாக அமைந்து விடுகிறது. எனவே, அரசு பள்ளி மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த கல்வித்துறை நடவடிக்கை வேண்டும். அப்போதுதான் தேர்ச்சி விகிதம் மேலும்
அதிகரிக்கும் என்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...