×

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் துவக்கம்

புதுச்சேரி, ஏப். 22:  மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் கண்ணன் எம்பி ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசியல் கட்சி தலைவர்களில் முக்கியமானவர்களில் கண்ணனும் ஒருவர். காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை துவக்கிய அவர், 1985ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக வெற்றிப்பெற்று சுகாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சரானார். தொடர்ந்து 1996ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து மூப்பனார் தனிக்கட்சி துவங்கிய போது அவருடன், கண்ணனும் கட்சியை விட்டு வெளியேறினார். புதுச்சேரி தமாகா மாநிலத்தலைவராக செயல்பட்டதோடு, அப்போது நடந்த தேர்தலில் தமாகா 6 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. இதில் கண்ணன் உள்துறை அமைச்சரானார். தொடர்ந்து சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பின்னர் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை துவங்கி நடத்தி வந்தார்.

பின்னர் கட்சியை கலைத்துவிட்டு, மீண்டும் காங்கிரசில் இணைந்தார். இதற்காக கண்ணனுக்கு  ராஜ்யசபா எம்பி பதவியும் கிடைத்தது. 2016ம் ஆண்டு திடீரென அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலாலிதாவை நேரில் சந்தித்து, அதிமுகவில் இணைந்தார். ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியலில்  ஈடுபடாமல் அமைதியாக இருந்து வந்தார். பின்னர் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து ஆளும் கட்சி, எதிர்கட்சிகளை கடுமையாக சாடி வந்தார். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக புதிய கட்சி துவங்கப்படும் என அறிவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தில் தனது வழக்கறிஞர் மூலமாக புதிய கட்சியை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டார்.  புதுச்சேரி முழுவதும் கண்ணனுக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர். எனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கண்ணன் போட்டியிடுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை, என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்பேன் என கண்ணன் கூறியிருந்தார். வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக என்னுடைய ஆதரவு  யாருக்கும் இல்லையென தடாலடியாக அறிவித்தார். இதற்கிடையே மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதில் கட்சி தலைவராக ப. கண்ணன், பொதுச்செயலாளராக முதலியார்பேட்டை பட்டம்மாள் நகர் வெற்றிச்செல்வம், பொருளாளராக மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முரளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கான பொது அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயருக்கு,  எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லையெனில் 30 நாட்களுக்கு பிறகு கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டு விடும். வரும் தை மாதம் கட்சி அலுவலக திறப்பு விழா இருக்கும் என கண்ணன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கண்ணன் தனது ஆதரவாளர்ளுடன் தேர்தல் களத்தில் குதிப்பார் என தெரிவித்துள்ளனர். தற்போது கண்ணன் 3வதாக புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Progress Congress ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...