×

2 கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

வேப்பூர், ஏப். 22:  வேப்பூர் அருகே 2 கோயில்களின் உண்டியலை உடைத்து பணத்தையும், பித்தளை மணிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது ஏ.அகரம் கிராமம். இங்குள்ள மக்கள் வழிபடும் மதுரைவீரன் சாமி கோயில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. இக்கோயிலில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்வது வழக்கம். சம்பவத்தன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயிலுக்கு பூஜை செய்ய பூசாரி சென்றுள்ளார். அப்போது கோயிலில் கட்டப்பட்டிருந்த ரூ.4500 மதிப்புள்ளதும், 5 கிலோ எடை கொண்டதுமான பித்தளை மணி காணாமல் போயிருந்தது. மேலும் கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆசைதம்பி என்பவர் வேப்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர். மற்றொரு கோயில்: அகரம் கிராமம் பெண்ணாடம்-வேப்பூர் சாலையில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலிலும் 15 கிலோ அளவில் உள்ள ஒரு மணி, 5 கிலோ அளவில் ஒரு மணி, 3 கிலோ அளவில் ஒரு மணி என மொத்தம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 மணிகளையும், கோயில் உண்டியலை உடைத்து பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்த கோயில் உண்டியல் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். வருடந்தோறும் சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இக்கோயில் உண்டியலில் காணிக்கை இருக்குமாம். அதுபோன்று இந்த வருடமும் உண்டியலில் சுமார் ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரே நாளில் 2 கோயிலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்தும் வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்