வாணியம்பாடி அருகே பலத்த காற்றுடன் மழை மின்னல் தாக்கி 2 பசுக்கள் பலி 4 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

வாணியம்பாடி, ஏப்.22: வாணியம்பாடி அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்தது. மேலும், 4 ஆயிரம் வாழை மரங்கள் சேதமானது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கோடை மழை பெய்தது. வாணியம்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில், மேல்நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45). இவர் தனக்கு சொந்தமான 2 பசுக்களை வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மின்னல் தாக்கி 2 பசுக்களும் கருகி இறந்தது. இதுகுறித்து, தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் முருகன், ஆர்ஐ சம்பங்கி மற்றும் விஏஓ அகிலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டு மணி என்பவருக்கு சொந்தமான 1000 வாழை மரங்களும், விஜிலாபுரத்தில் லட்சுமிகாந்தன் என்பவருக்கு சொந்தமான 3 ஆயிரம் வாழை மரங்களும் மழையுடன் பலத்த காற்று வீசியதால் வேரோடு முறிந்து சேதமானது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் இருவரும் தங்களுக்கு தமிழக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: