×

ஜோலார்பேட்டை நகராட்சியில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி

ஜோலார்பேட்டை, ஏப்.22: ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11வது வார்டு வாலாட்டியூர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மினி டேங்க் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அங்குள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், நீர்மட்டம் குறைந்துள்ளதால் கூடுதலாக ஆழ்துளை கிணற்றில் பைப்லைன் அமைக்க வேண்டும் என்றனர். பின்பு நகராட்சி சார்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் கூடுதலாக பைப்லைன் அமைக்கப்பட்டது.

ஆனால் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை சரி செய்யாததால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிக்கு சென்றும், வாகனங்கள் மூலம் விலை கொடுத்தும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நகராட்சி சார்பில் பைப்லைன் அமைத்துவிட்டு சென்றவர்கள் மேற்கொண்டு பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுது ஏற்பட்டுள்ள மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jolarpettai ,
× RELATED பெங்களூரு ரயில் போக்குவரத்தில் மாற்றம்