×

திருவண்ணாமலை வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்காக அலைமோதும் மான்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஏப்.22: திருவண்ணாமலை வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்காக மான்கள் அலைமோதி வருகின்றன. இதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலையில் மலையை ஒட்டியுள்ள வனப்பகுதி, கவுத்திமலை காடு மற்றும் திருவண்ணாமலை அருகே உள்ள சொரகொளத்தூர் காட்டுப்பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மேற்கண்ட வனப்பகுதிகளில் மான்கள் மட்டுமின்றி முயல்கள், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகம் வசித்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதிய மழையின்றி வறட்சி நிலவி வருவதால் ஆறு, குளம், ஏரிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. போதிய தண்ணீர் இல்லாததால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வனப்பகுதியில் உள்ள மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் படையெடுக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு தண்ணீர் தேடி வரும் மான்கள் சாலையில் வரும் வாகனங்களில் அடிப்பட்டும், நாய்களால் கடிக்கப்பட்டும் மற்றும் கிணற்றில் தவறி விழுந்தும் உயிரிழக்கிறது.

மேலும், வனப்பகுதியில் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் இன்றி உள்ளது. திருவண்ணாமலையில் கடந்த சில மாதங்களாக மான்கள் காடுகளை விட்டு தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து ஆபத்தில் சிக்கிக்கொண்டு இறக்கிறது. உயிருடன் மீட்கப்படும் மான்களை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டு வருகின்ற நிலை நடைபெற்று வருகிறது. எனவே விலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : forest ,Thiruvannamalai ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...