×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்கத்தேர் இழுத்த போது பீடத்துடன் கலசம் உடைந்து கீழே விழுந்தது ஒருவர் படுகாயம்

திருவண்ணாமலை, ஏப்.22: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வேண்டுதலுக்காக தங்கத்தேர் இழுத்து சென்றபோது, தேர் உச்சியிலிருந்து பீடத்துடன் கலசம் உடைந்து கீழே விழுந்ததில் பக்தர்கள் ஒருவர் படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று, கட்டண தொகையை செலுத்தி பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். சுமார் 16 அடி உயரமுள்ள தங்க தேர் கடந்த 2006ம் ஆண்டு ₹87 லட்சம் மதிப்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டது. அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணி காரணமாக கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி முதல் தங்கதேர் பவனி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும், தங்க தேர் பவனி வராமல் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால், தேரின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டது. மேலும், தங்கத்தேரை சீரமைக்கும் பணியை அறநிலையத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டது. இதற்கிடையே, உபயதாரரின் உதவியுடன் ₹3.50 லட்சம் மதிப்பில் தேர் சீரமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.

இந்நிலையில், நேற்று ஒரு பக்தர்கள் குழுவினர் தங்கத்தேர் இழுத்து நேர்த்திகடன் செலுத்த வந்தனர். அதன்படி காலை சுமார் 9.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேருக்கு 3ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் அருகே பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், அங்கிருந்து தேரை இழுத்தனர். சுமார் 30 அடி தூரம் வந்தநிலையில், சம்மந்த விநாயகர் சன்னதி எதிரே, திடீரென தங்கத் தேரின் உச்சியில் இருந்த தங்க கலசம் பீடத்தோடு உடைந்து கீழே விழுந்தது. அப்போது, தேர் அருகே நின்று இருந்த வேட்டவலம் சாலை பசுங்கரையை சேர்ந்த மணிவண்ணன்(26) என்பவர் மீது கலசம் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவருக்கு கோயிலில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, தொடர்ந்து தேரை இழுத்து சென்று பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கீழே விழுந்த பீடத்துடன் கூடிய கலசத்தை கோயில் ஊழியர்கள் உடனடியாக எடுத்து சென்று துணி சுற்றி அறையில் வைத்து பூட்டினர்.

பின்னர் பவனி முடிந்ததும் அவசர, அவசரமாக தேர் நிறுத்தப்படும் அறைக்கு இழுத்து சென்று வைத்து அனைத்து கதவுகளையும் அடைத்து, பக்கவாட்டில் உள்ள ஜன்னல்களை துணிகளை கொண்டு மறைத்து வைத்தனர். தங்கத்தேரின் உச்சியிலிருந்த கலசம் சரியாக பொருத்தப்படாமல் கழன்று கீழே விழுந்ததா? அல்லது கேபில் ஒயர் தடுத்ததால் உடைந்து விழுந்ததா? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் வெளியே சென்றுவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து கோயில் அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தங்கத்தேரில் இருந்து திடீரென கலசம் கீழே விழுந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Tiruvannamalai Annamalaiyar ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...