தி.நகர் நடைபாதை வளாகத்தை சுற்றியுள்ள 14 சாலைகளில் 2.48 கி.மீ நீளத்திற்கு வாகன நிறுத்த வசதிகள் மேம்பாடு: மாநகராட்சி திட்டம்

சென்னை: தி.நகர் நடைபாதை வாளகத்தை சுற்றியுள்ள 14 சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்த சென்னை மாநராட்சி திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பூங்கா, போக்குவரத்து விதிகளை அறிந்துகொள்ளும் வகையில் போக்குவரத்து பூங்கா, சைக்கிள் ஷேரிங் திட்டம், பல் அடுக்‌கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரூ.33 கோடி செலவில் தி.நகரில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பனகல் பூங்கா சாலை, போக் சாலை, தணிகாசலம் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நடபாதை வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர்த்து வடக்கு உஸ்மான் சாலை, வெங்கட் நாராயணா சாலை உள்ளிட்ட சாலைகள் ஸ்மார்ட் சாலைகளாக மேம்படுத்தபட உள்ளது. இதற்காக ரூ.5.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபாதை வளாகத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பாண்டிபஜார் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாகன நிறுத்த மேலாண்மை குழு மற்றும் போக்குவரத்து கொள்கைகள் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து தி.நகர் நடைபாதை வளாக்தை சுற்றியுள்ள சாலைகளில் ஆய்வு நடத்தினர். அதன்படி ராஜா பதார் தெரு (377 மீ.,), தீன தயாளு தெரு ( 220 மீ.,), லட்சுமி காந்தன் தெரு (155 மீ.,), பாசுதேவா தெரு (89 மீ.,), ராஜா ெதரு (212 மீ.,), மாசிலாமணி தெரு (180 மீ.,), கோபால கிருஷ்ணன் சாலை (228 மீ.,), கோபாலகிருஷ்ணன் சாலை நீட்டிப்பு (151 மீ.,), ராஜா பதார் தெரு நீட்டிப்பு (40 மீ.,), சிவஞானம் தெரு (190 மீ.,), னிவாஸ் தெரு (182 மீ.,), முத்துகிருஷ்ணன் தெரு (150 மீ.,), சிவபிரகாரம் தெரு (180 மீ.,), சிங்கார வேலு தெரு (135 மீ.,) உள்ளிட்ட 14 தெருக்களில் 2.48 கி.மீ., நீளம் கொண்ட சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் வாகன நிறுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்தும் பணியை ஸ்மார்ட் சிட்டி நிதியின் மூலம் சென்னை மாநகராட்சி செய்யவுள்ளது. இதன்மூலம் தி.நகர் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: