எர்ணாவூர் பகுதியில் திறந்தநிலை கால்வாயால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்

திருவொற்றியூர்: எர்ணாவூரில் உள்ள சாலையோர திறந்தநிலை கால்வாயால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டுக்கு உட்பட்ட எர்ணாவூரில் மாகாளியம்மன் கோயில் தெரு, இரணீஸ்வரர் கோயில் தெரு போன்ற பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் செப்டிக் டேங்க் அமைத்து கழிவுநீரை தேக்கி, பின்னர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்துகின்றனர். குளிப்பது, துணி துவைப்பது போன்ற அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நீரை தெருவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. இந்த கால்வாய்களை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. இதனால், குப்பைகள் விழுந்து ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகிறது.

நாள் கணக்கில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகமாகி, இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், சாலையோரம் திறந்த நிலையில் கால்வாய் உள்ளதால், வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக, அந்த வழியாக செல்லக்கூடிய சிறுவர்கள் கால் தடுமாறி இந்த திறந்தநிலை கால்வாயில் விழுகின்றனர். எனவே, இந்த கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும், கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: