அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழித்திரை அறுவை சிகிச்சை கருத்தரங்கு: கவர்னர் தொடங்கி வைத்தார்

சென்னை: விழித்திரை அறுவை சிகிக்சை குறித்த அகர்வால் கண் மருத்துவமனையின் 9வது கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், விழித்திரை அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அகர்வால் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் அமர் அகர்வால், ஆதித்யா அகர்வால், சிறப்பு விருந்தினராக அமெரிக்க டாக்டர் சுனிர் கார்க் மற்றும் விஞ்ஞானி லலித் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது: கண் மனித உடலில் சிக்கலான உறுப்பும், முக்கியமான உறுப்பும் ஆகும்.  நீரிழிவு நோய் அதிகரிக்க அதிகரிக்க, விழித்திரை பாதிப்படையும். இதனால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டு 7 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், இதியாவில் 1.5 கோடி பேர் பார்வை பழுதடைந்துள்ளனர். ஆனால் கண் மருத்துவர்களோ 15 ஆயிரம் பேர் தான் உள்ளனர். 1 லட்சம் மக்களுக்கு 1 கண் டாக்டர்கள் தான் உள்ளனர். இந்த விகிதம் அதிகரிக்க வேண்டும். வரும் முன் காப்பது சிறந்தது என்ற பொன்மொழிக்கு ஏற்ப, கண் பார்வையை நாம் உடற்பயிற்சி மேற்கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்.

தினம் சூரியனை வழிபடுவது கண்ணிற்கு நல்லது. எனவே இந்த கருத்தரங்கு டாக்டர்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமையும். அகர்வால் கண் மருத்துவமனை கண் சிகிச்சைக்கு சென்னையில் முன்னோடியாக உள்ளது.

இவ்வாறு பேசினார். அகர்வால் மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் பேசியதாவது: கேமராவின் பிலிம் போன்றது கண்ணின் விழித்திரை. கண்ணில் ரத்தம் வழிவது, ரத்தம் கட்டுவது தான் விழித்திரை பாதிப்பாகும், இது முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இது தொடர்பாக விவாதிக்க, தெரிந்துகொள்ள கருத்தரங்கு நடைபெறுகிறது. இதற்கு 1000 மருத்துவர்கள் வந்துள்ளனர். எனவே மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டு கண்ணை பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: