வெயிலின் தாக்கம் எதிரொலி பக்தர்களின் வசதிக்காக கோயில்களில் சிறப்பு ஏற்பாடு: கமிஷனர் உத்தரவு

சென்னை: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோயில்களில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 4 ஆயிரம் முக்கிய கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்த கோயில்களுக்கு வரும் பக்தர்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து ேகாயில் நிர்வாக அலுவலர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மோர் வழங்க வேண்டும். கோயில்களில் நிழற்பந்தல் அமைக்க வேண்டும். மேலும், நடைபாதைகளில் சணல் மிதியடிகள் மற்றும் வெள்ளை நிற பூச்சு பூசுதல் போன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

அதற்கான செலவை அந்தந்த கோயில் நிர்வாகத்தின் வருவாயில் இருந்து எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயில்களில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கோயில் நிர்வாகத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோயில் நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைப்பது, லாரிகள் மூலம் தண்ணீரை வாங்கி சேமித்து வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘கோயில்களுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், கோயில்களில் இதர தேவைகளுக்காகவும் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. இதற்காக, குளங்கள் உள்ள கோயில்களில் போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்க முடிவு செய்துள்ளோம். ஒரு சில கோயில்களில் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி சேமித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளோம்’ என்றார்.

Related Stories: