12 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு : மின்வாரிய அலுவலகம் முற்றுகை

ஈரோடு, ஏப். 21: ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் 12 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டித்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் உதவி மின் பொறியாளரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் பலத்த இடி-மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்தது. இதனால் மாநகரில் பல்வேறு இடங்களில் மின் ஓயர்கள் பழுதாகி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதில், ஈரோடு கனிராவுத்தர்குளம் சிஎஸ் நகர் நந்தவனத்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு மின் இணைப்பு ஓயர்கள் பழுதால் தடை பட்டது. மின் ஊழியர்கள் மின் தடையை சீர்செய்ய முன்வராததால், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை மின் இணைப்பு இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.  இதனையடுத்து நேற்று காலை ஈரோடு கனிராவுத்தர்குளத்தில் உள்ள ஈரோடு உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், கனிராவுத்தர் குளம் பகுதியில் 4 முதல் 5 இடங்களில் நேற்று(நேற்று முன்தினம்) இரவு மின்சாரம் தடை பட்டிருந்தது.

அதில் 4 இடங்களில் மின் ஓயர்கள் பழுதினை நீக்கி சரி செய்து விட்டோம். சிஎஸ் நகர் பகுதியில் எந்த இடத்தில் மின் பழுது உள்ளது என்பதை தற்போது தான் கண்டுபிடித்து, அந்த இடத்தில் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார். போராட்டத்திற்கு இடையிலேயே மின் பழுதுகள் சீரமைக்கப்பட்டு அப்பகுதிக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டதால், மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: