நெல்ைலயப்பர் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம்

நெல்லை, ஏப். 21:  நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் வசந்த உற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளானோர் பங்கேற்றனர். கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும்–்பொருட்டு கோயில்களில் வசந்த உற்சவம் நடத்தப்படுவது ஐதீகம். கத்தரி வெயில் எனப்படும் அக்னிநட்சத்திரம் துவங்க உள்ள நிலையில் இந்தாண்டுக்கான வசந்த உற்சவம் திக்கெட்டும் புகழ் சேர்க்கும் பிரசித்திபெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், அஸ்திரதேவி, அஸ்திர தேவர், தாமிரபரணி தேவி ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளி சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தை வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி மற்றும் அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து வசந்த உற்சவ விழா நெல்லையப்பர் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று துவங்கியது. இவ்விழா தொடர்ந்து வரும் 30ம் தேதி வரை 11 நாட்கள் விழா நடக்கிறது. முதல்நாளான நேற்று, சுவாமி, அம்பாள் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினர். கோடை வெப்பம் தாக்காமல் தடுக்க வசந்த மண்டபத்தை சுற்றி தெப்பம் போன்று தண்ணீர் நிரப்பப்பட்டது.  நேற்று காலை கும்பம் வைத்து பூஜைகள் நடந்தது. அத்துடன் கோடை உஷ்ணத்தில் இருந்து விடுபடவும், குளிர்ச்சி ஏற்படும் வகையில் வெள்ளரி பிஞ்சு, பானகரம் உள்ளிட்ட பொருட்கலால் சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. வசந்த உற்சவ திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு குளிர்ச்சியான பல்வேறு நிவேத்தியங்கள் படைத்து வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

Related Stories: