கல்லிடைக்குறிச்சி, களக்காடு பெருமாள் கோயில்களில் தீர்த்தவாரி வைபவம் கோலாகலம் திரளானோர் பங்கேற்பு

அம்பை, ஏப். 21: கல்லிடைக்குறிச்சி ஆதிவராக பெருமாள் கோயில், களக்காடு வரதராஜ பெருமாள் கோயில்களில் தீர்த்தவாரி வைபவம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.  கல்லிடைக்குறிச்சி  பூமி நீளா சமேத ஆதிவராக பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருமஞ்சன அலங்கார தீபாராதனை, சிறப்பு அலங்காரத்தில் கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முத்தாய்ப்பான தேரோட்ட வைபவம் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளாகப் பங்கேற்றோர், வடம்பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர். இந்நிலையில் 11ம் நாளையொட்டி தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை சிறப்பு வழிபாட்டினைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் கேடய வாகனத்தில் எழுந்தருளி தெற்கு மாடத்தெரு, மேல மாடவீதி வழியாக தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை வந்தடைந்தார். இதையடுத்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், அதன் பிறகு தாமிரபரணி நதியில் பல்வேறு அபிஷேகத்துடன் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் ஆற்றில் நீராடி தரிசித்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தாயாருடன் பூம்பல்லக்கில் எழுந்தருளியதும் வீதியுலா  நடந்தது.
Advertising
Advertising

களக்காடு: இதே போல் தென் மாவட்டத்தில் தனித்துவமிக்க பழம்பெருமைமிக்க களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை இரவு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில்  பெருமாள் வீதியுலா நடந்தது. 7ம் நாளில் திருக்கல்யாணமும், 8ம் நாளான கடந்த 17ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 10ம் நாளையொட்டி நேற்று முன்தினம் (19ம் தேதி) தேரோட்டமும், இதன் தொடர்ச்சியாக நேற்று (20ம் ேததி) தீர்த்தவாரி வைபவம் கோலாகலமாக நடந்தது.

இதையொட்டி தேவியர்களுடன் திருக்கல்யாண தெரு கருத்தர் விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதன் தொடர்ச்சியாக தீர்த்தவாரியும் விமரிசையாக நடந்தது. இரவு ஊஞ்சல் வாகனத்தில் தேவியர்களுடன் பெருமாள் வீதியுலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர்.

Related Stories: