×

கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால், ஏப். 21:    காரைக்காலில் வரலாற்று புகழ்மிக்க கோயில்களில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலும் ஒன்று. இறைவனின் திருவாயால், அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவ மூர்த்தி கோலத்தில் அம்மையார் கோயிலில் நடைபெறும் அமுதுபடையலுக்கு செல்வதும். அம்மையார் அவரை எதிர்கொண்டு அழைத்து, சிறப்புமிக்க அமுது படையல் படைப்பது சிறப்புமிக்கதாகும்.  இந்த காட்சியை காண திரளான மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவர். இதேபோல், பிரமோத் வத்தின்போது பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும்.  சித்திரை பவுர்ணமி நாளிலும் பிச்சாண்டவ மூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.  ஆண்டில் முக்கிய நாட்களில் மட்டுமே பிச்சாண்டவருக்கு ஆராதனைகள் நடத்தப்படுவதால் ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று சிவபெருமானை தரிசிப்பர். விகாரி ஆண்டின் சித்திரை மாத பவுர்ணமி நாளான நேற்று முன்தினம் காலை கோயிலில் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் புனிதநீர் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.  தொடர்ந்து பால், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஹோமத்தில் வைத்திருந்த புனிதநீர் கொண்டு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து  ஆராதனைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் அபிஷேகத்துக்கான்பாலை கோயில் நிர்வாகத்திடம் வழங்கியிருந்தனர்.

Tags : Special Anisas ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...