×

ஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி, ஏப். 21: ஊசுட்டேரி மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுவையின் சுற்றுலாதலங்களில் ஒன்று ஊசுட்டேரி. 390 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஊசுட்டேரியின் மொத்த நீர்பிடிப்பு பகுதி 15.54 சதுர கி.மீ ஆகும். ஏரிக்கரையின் மொத்த நீளம் 7.2 கி.மீ. மொத்த கொள்ளளவு 54 கோடி கனஅடி. சங்கராபரணி ஆறு, வீடூர் அணையில் இருந்து ஊசுட்டேரிக்கு நீர் வருகிறது. மேலும், சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சி ஆற்றிலிருந்தும் ஏரிக்கு பெருமளவில் நீர் வருகிறது. அதேபோல், மழை பெய்தாலும் நீரின் அளவு அதிகரிக்கும்.நவம்பர் முதல் பிப்ரவரி வரை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து ஊசுட்டேரிக்கு பறவைகள் படையெடுத்து வருகின்றன. இனபெருக்கம் செய்ய ஏற்ற சூழல் இங்கு அமைந்திருப்பது தான் இதற்கு காரணம். இதனால் கடந்த 2008ல் புதுவை அரசு ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது.ஊசுட்டேரியில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழகம் (பிடிடிசி) சார்பில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்வதற்காக 2 படகுகள் இயக்கப்படுகின்றன. அந்த படகுகள் தற்போது பெயிண்ட் அடித்து புதுப்பொலிவு பெற்றுள்ளன. ஊசுட்டேரியில் மெதுவாக இயக்கப்படும் இந்த படகுகளில் அமர்ந்தவாறு பறவைகளின் அழகை பக்கத்திலிருந்து பார்த்து ரசிக்க முடியும். ஆனால் தற்போது ஊசுட்டேரியில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் கரையோரம் மட்டுமே படகுகள் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறையையொட்டி வெளியூர் சுற்றுலா பயணிகளின் வரத்து ஊசுட்டேரிக்கு அதிகரித்துள்ளது. அவர்கள், படகுகளில் உற்சாக சவாரி செய்து மகிழ்கிறார்கள். ஒரு படகில் 26 பேர் வரை சவாரி செய்ய முடியும். பெரியவருக்கு ரூ.100ம், சிறுவர்களுக்கு ரூ.60ம் படகு சவாரி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதேபோல், சுண்ணாம்பாறு படகு குழாமிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள், பாரடைஸ் பீச்சுக்கு படகு சவாரி செய்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...