திருச்சியில் ரூ.50, 500 கள்ளநோட்டு புழக்கம் காந்தி மார்க்கெட் பழக்கடையில் மாற்ற முயன்றவர் கைது

திருச்சி, ஏப். 21:   திருச்சியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கத்தை கத்தையாக கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகே உள்ள பழக்கடையில் நேற்று காலை ஒருவர் ரூ.50 கொடுத்து பழம் வாங்கினார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டை பார்த்த கடைக்காரருக்கு நோட்டில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் பழம் வாங்க வந்தவரிடம் பேச்சு கொடுத்தவாறு, காந்தி மார்க்கெட் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அவரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சிக்கியவர் வாகித்பாஷா(42) என்பதும், பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்தது கள்ளநோட்டு என்பதையும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் சோதனை நடத்தியபோது மேலும் 85 நோட்டுகள்(ரூ.50) வைத்திருந்தார். அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த ரூபாய் நோட்டு எப்படி வந்தது, இவரே கள்ள நோட்டு அச்சடித்தாரா அல்லது வெளி இடங்களில் இருந்து வரும் கள்ளநோட்டுகளை விநியோகம் செய்யும் ஏஜென்டா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகித்பாஷா ஏற்கனவே 500 ரூபாய் கள்ளநோட்டுக்களையும் புழக்கத்தில் விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்தினால் கள்ளநோட்டு கும்பல் பிடிபடும் என கருதி அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், ஏற்கனவே கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டு கைதாகி தற்போது வெளியில் உள்ள ஒருவரிடம் வாங்கி விநியோகத்ததாக போலீசாரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: