×

திருவாரூர் பகுதியில் 2வது நாளாக மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவாரூர், ஏப். 21: திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும் 2வது நாளாக மிதமான மழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும்  மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை இருந்து வருவதுடன் குளம் குட்டைகளிலும் நீர் வறண்டு வரும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைவதால்  போர்வெல்களின் மட்டமும் குறைந்து சரிவர தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுமட்டுமன்றி கோடை வெயில் காரணமாக மேய்ச்சலின்றி கால்நடைகளும் பட்டினியால் வாடி வருகின்றன.

இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும்  நிலையில்  நேற்று  முன்தினம் திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் மேகமூட்டம் இருந்த நிலையில்   திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் வரையில் பலத்த சூறை காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. இதன் காரணமாக திருவாரூர் நகரில் தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு தாழ்வான இடங்களில் மழை நீரானது குட்டை போல் தேங்கியது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழையின் மூலம் கால்நடைகளுக்கும் மேய்ச்சலுக்கு வழி கிடைத்தது. இந்நிலையில் நேற்றும் சுமார் 20 நிமிடம் வரையில் மிதமான மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நீர் இல்லாமல் தவித்து வரும் நிலையில் இந்த மிதமான மழையானது கைகொடுத்ததால் அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Rain farmers ,public ,Thiruvarur ,
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள்...